Wednesday, May 20, 2020

70) ஆய்த எழுத்து - முற்றாய்தம்


மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


அது

முதல் எழுத்து
(Primary Letter)
சார்பு எழுத்து
(Secondary Letter)

என
இரு வகையாம்


உயிர் எழுத்து
(Vowel)
மெய் எழுத்து
(Consonant)

ஆகிய இரண்டும்
முதலெழுத்து


உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும்
சார்பெழுத்து


இங்கு


சார்பு எழுத்துகளில்
ஒன்றான

ஆய்தம்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


ஒலியை
நுண்மையாக்கி
அதாவது
மென்மையாக்கி
காட்டுவதால்

ஆய்த எழுத்து

(ஆய்தல் இருப்பதை
நுட்பமாக்கி காட்டுதல்)

என்றும்


உயிரையும்
மெய்யையும்
ஒருவகையொத்து
உயிருமாகாமல்
மெய்யுமாகாமல்
தனித்து
நிற்பதால்

தனிநிலை

என்றும்


படைக் கருவிகளில்
ஒன்றான
கேடயத்தில் உள்ள
முப்புள்ளி ()
வடிவில்
எழுதப்படுவதால்

முப்புள்ளி
முப்பாற்புள்ளி

என்றும்


ஓசையின்
அடிப்படையில்

அஃகேனம்

என்றும்


அழைக்கப்படும்
அது
(ஆய்த எழுத்து)


தனித்து வராமல்
தனிமொழி
தொடர்மொழிகளின்
இடையில் மட்டும்


குற்றெழுத்தின்
முன்னதாய்

உயிரொடு
கூடிய

வல்லெழுத்து
ஆறனுள்
ஒன்றன்
மேலதாய்
வரும்


அவ்வாறு வரும்
ஆய்தம்

தன்னை
ஊர்ந்துவரும்
வல்லெழுத்து
ஒலியை

நுண்மையாக்கியும்
மென்மையாக்கியும்
காட்டும்


அதன்
அடிப்படையில்


வல்லின வகையால்
வரும்
ஆய்தம் ஆறு

(உ-ம்)

(உகரத்துடன்)

எஃகு
கஃசு
கஃடு
கஃது
கஃபு
கஃறு

போல்வன


(பிற உயிர்களோடு)

அஃகம்
அஃகாமை
அஃகி
அஃகோ

போல்வன


புணர்ச்சி விகாரத்தால்
வரும்
ஆய்தம் ஒன்று

(உ-ம்)

அஃறிணை (அல் + திணை)
அஃகடிய (அவ் + கடிய)
அஃகான் (அ + கான்)
மஃகான் (ம + கான்)

போல்வன


செய்யுள் விகாரத்தால்
வரும்
ஆய்தம் ஒன்று

(உ-ம்)

விலஃஃகி
இலஃஃகு

போல்வன


என
ஆக மொத்தம்
முற்றாய்தம்
எட்டு ஆகும்


(முற்றாய்தம்
மாத்திரை குறையாத
ஆய்தம்)


நன்னூல்
சூத்திரம்-90


குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே

குறிஅதன் முன்ன ர்ஆய்தம் புள்ளி
உயிர்ஒடு புணர்ந்தவல் ஆறன் மிசைத்துஏ

குற்றெழுத்தின் முன்னதாய் முற்றாய்த
எழுத்தானது உயிரொடு கூடிய வல்லெழுத்து 
ஆறனுள் ஒன்றன் மேலதாய் வரும்


நினைவு கூர்க


நன்னூல்
சூத்திரம்-58


மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே

மொழிமுதல் காரண ம்ஆம்அணுத் திரள்ஒலி
எழுத்துஅது முதல்சார் புஎனஇரு வகைத்தே

மொழிக்கு முதற்காரணமான அணுத்திரள்
ஒலியே எழுத்து; அது முதல் சார்பு என
இரு வகையாம்


நன்னூல்
சூத்திரம்-59


உயிரு முடம்புமா முப்பது முதலே

உயிரு ம்உடம்பும்ஆம் முப்பது முதலே

உயிர் எழுத்து (பன்னிரண்டும்)
மெய் எழுத்து (பதினெட்டும்) ஆகிய
முப்பது எழுத்து முதலெழுத்தாம்


நன்னூல்
சூத்திரம்-60


உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்

உயிர்மெய் ஆய்த ம்உயிர்அள புஒற்றுஅள
புஅஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் துஆகும்

உயிர்மெய், ஆய்தம் (தனிநிலை),
உயிரளபெடை (உயிரளபு),
ஒற்றளபெடை (ஒற்றளபு),
குற்றியலிகரம், (அஃகிய இ)
குற்றியலுகரம் (அஃகிய உ),
ஐகாரக்குறுக்கம் (அஃகிய ஐ),
ஔகாரக்குறுக்கம் (அஃகிய ஔ),
மகரக்குறுக்கம் (அஃகிய மஃகான்),
ஆய்தக்குறுக்கம் (அஃகிய தனிநிலை)
ஆகிய பத்தும் சார்பெழுத்து ஆகும்.


நன்னூல்
சூத்திரம்-61


உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை
ஆறே ழஃகு மிம்முப் பானேழ்
உகர மாறா றைகான் மூன்றே
ஔகா னொன்றே மஃகான் மூன்றே
ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப

உயிர்மெய் இரட்டுநூற் றுஎட்டுஉய ர்ஆய்தம்
எட்டுஉயி ர்அளபுஎழு மூன்றுஒற் றுஅளபெடை
ஆறுஏ ழ்அஃகு ம்இம்முப் பான்ஏழ்
உகர ம்ஆறுஆ றுஐகான் மூன்றே
ஔகா ன்ஒன்றே மஃகான் மூன்றே
ஆய்த ம்இரண்டொடு சார்பெழுத் துஉறுவிரி
ஒன்றுஒழி முந்நூற் றுஎழுபா ன்என்ப

உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு; குறுகாத
ஆய்தம் எட்டு; உயிரளபெடை இருபத்தொன்று;
ஒற்றளபெடை நாற்பத்திரண்டு; குற்றியலிகரம்
முப்பத்தேழு; குற்றியலுகரம் முப்பத்தாறு;
ஐகாரக்குறுக்கம் மூன்று; ஔகாரக்குறுக்கம்
ஒன்று; மகரக்குறுக்கம் மூன்று; ஆய்தக்குறுக்கம்
இரண்டோடு சார்பெழுத்தின் மிகுந்த விரி
ஒன்று குறைந்த முந்நூற்றெழுபது அதாவது
முந்நூற்று அறுபத்தொன்பது என்பர்.



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu


தமிழ் இலக்கணம் சார்பெழுத்து ஆய்த எழுத்து / முற்றாய்தம்

Tamil Grammar Secondary Letter The Guttural /Aytham



No comments:

Post a Comment