Wednesday, May 20, 2020

74) சொல்லிசை அளபெடை


செய்யுளில்
ஓசை
குறையும்போது

அவ்வோசை
குறைந்த
சொல்லுக்கு

முதலிலும்
இடையிலும்
இறுதியிலும்
நின்ற

நெட்டெழுத்து
ஏழும்

அவ்வோசையை
நிறைக்க

தத்தம்
ஒலிக்கும் கால அளவில்
மிகுந்து ஒலிப்பது

உயிரளபெடை


அவ்வாறு
அளபெடுத்தமையை
அறிதற்கு

அவற்றின் பின்
(நெட்டெழுத்துகளின் பின்)

(ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ)

அததற்கு
இனமாகிய
குற்றெழுத்துகள்

(அ இ உ எ இ ஒ உ)

அடையாளமாய்
வரும்


அது
(உயிரளபெடை)


அளபெடுக்கும்
இடம் சார்ந்து
மூவகை

முதல்நிலை அளபெடை
இடைநிலை அளபெடை
கடைநிலை அளபெடை


அளபெடுக்கும்
தன்மை சார்ந்து
மூவகை

செய்யுளிசை அளபெடை
இன்னிசை அளபெடை
சொல்லிசை அளபெடை


இங்கு


உயிரளபெடைகளில்
ஒன்றான

சொல்லிசை அளபெடை
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


செய்யுளில்
ஓசை
குறையும்போது
அளபெடுத்து
ஓசையை
நிறைவு செய்வது

செய்யுளிசை அளபெடை
(இசைநிறை அளபெடை)

(உ-ம்)

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்

(திருக்குறள் 653)


செய்யுளில்
ஓசை
குறையாதபோதும்
இனிய
ஓசையின்பொருட்டு
அளபெடுப்பது

இன்னிசை அளபெடை

(உ-ம்)

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

(திருக்குறள் 15)


இவற்றைப்போல்
(செய்யுளிசை அளபெடை
இன்னிசை அளபெடை)
இல்லாது


ஒரு
பெயர்ச்சொல்லை
வினையெச்சமாக
மாற்றும்பொருட்டு
அளபெடுப்பது

சொல்லிசை அளபெடை

(உ-ம்)

உரனசைஇ உள்ளத் துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னு முளேன்

(திருக்குறள் 1263)


இக்குறட்பாவில்


விருப்பம் (நசை)
என்னும்
பெயர்ச்சொல்லை

விரும்பி (நசைஇ)
என்னும்
வினையெச்சச்
சொல்லாக
மாற்றுவதற்கென்றே
அளபெடுத்து


கருவிளங்காய்  தேமா   புளிமாங்காய்  தேமா
நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர்நேர்  நேர்நேர்
உர/னசை/இ உள்/ளத் துணை/யா/கச் சென்/றார்

வர/னசை/இ இன்/னு முளேன்
நிரைநிரைநேர்  நேர்நேர் நிரை
கருவிளங்காய்   தேமா   மலர்


வெண்பாவிற்கான
சீர் மற்றும்
தளைகளைப் பெற்று
ஓசையை
நிறைவுசெய்வதை
அறியலாம்


இவ்வாறு


ஒரு
பெயர்ச்சொல்லை
வினையெச்சமாக
மாற்றும்பொருட்டு
அளபெடுப்பது

சொல்லிசை
அளபெடையாம்.



நினைவு கூர்க:


வெண்பாவிற்கான
சீர், தளை
மற்றும் ஓசை


வெண்பாவிற்கான
சீர்

ஈரசைச் சீர்களான
மாச்சீரையும்
விளச்சீரையும்
பெற்று வரும்

மூவசைச் சீர்களில்
காய்ச்சீர்
மட்டுமே வரும்
கனிச்சீர் வராது


வெண்பாவிற்கான
தளை

வெண்டளை


அதன்
இரு வகை


இயற்சீர் வெண்டளை

மா முன் நிரை
விளம் முன் நேர்

வெண்சீர் வெண்டளை

காய் முன் நேர்


வெண்பாவிற்கான
ஓசை

செப்பலோசை

(வினாவுக்கு விடை
செப்புவதுபோல்
அமைந்திருப்பதால்
செப்பலோசை)


நன்னூல்
சூத்திரம்-91


இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில்
அளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே

இசைகெடின் மொழிமுத ல்இடைகடை நிலைநெடில்
அளபுஎழு ம்அவற்றுஅவற் றின்இனக்குறில் குறியே

(செய்யுளில்) ஓசை குறையும்போது (அவ்வோசை
குறைந்த சொல்லுக்கு) முதலிலும் இடையிலும்
இறுதியிலும் நின்ற நெட்டெழுத்து (ஏழும்
அவ்வோசையை நிறைக்க தத்தம்) ஒலிக்கும் கால
அளவில் மிகுந்து ஒலிக்கும் (அது உயிரளபெடை)
(அவ்வாறு அளபெடுத்தமையை) அறிதற்கு
(அவற்றின் பின்) அததற்கு இனமாகிய
குற்றெழுத்துகள் அடையாளமாய் வரும்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu


தமிழ் இலக்கணம் சார்பெழுத்து உயிரளபெடை 03-சொல்லிசை அளபெடை

Tamil Grammar Secondary Letter
Vowel Prolongation-03



No comments:

Post a Comment