Wednesday, May 20, 2020

76) குற்றியலிகரம்


மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


அது

முதல் எழுத்து
(Primary Letter)
சார்பு எழுத்து
(Secondary Letter)

என
இரு வகையாம்


உயிர் எழுத்து
(Vowel)
மெய் எழுத்து
(Consonant)

ஆகிய இரண்டும்
முதலெழுத்து


உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும்
சார்பெழுத்து


அச்சார்பு
எழுத்துகளில்


எழுத்தின்
ஒலிக்கும் கால அளவை
நீட்டித்து ஒலிப்பதால்
தோன்றும்
அளபெடைகள்
இரண்டு


1)   உயிரளபெடை
2)  ஒற்றளபெடை


எழுத்தின்
ஒலிக்கும் கால அளவை
குறைத்து ஒலிப்பதால்
தோன்றும்
குறுக்கங்கள்
ஆறு

1)   குற்றியலிகரம்
2)  குற்றியலுகரம்
3)   ஐகாரக்குறுக்கம்
4)  ஔகாரக்குறுக்கம்
5)  மகரக்குறுக்கம்
6)  ஆய்தக்குறுக்கம்


இங்கு


குற்றியலிகரம்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


நிலைமொழி
இறுதியில் நின்ற
குற்றியலுகரமானது

வருமொழியில்
யகரத்தை
முதலாகக் கொண்ட
சொல் வந்து
புணர

திரிந்த இகரமும்


(உ-ம்)

நாகு  + யாது = நாகியாது
எஃகு  + யாது = எஃகியாது
வரகு  + யாது = வரகியாது
கொக்கு+ யாது = கொக்கியாது
குரங்கு + யாது = குரங்கியாது
தெள்கு      + யாது = தெள்கியாது


அசைச்சொல்லாகிய
மியா என்னும்
சொல்லினது

மகர ஒற்றின்
மேலே
நின்ற இகரமும்

(உ-ம்)

கேண்மியா
சென்மியா

(மியா முன்னிலை அசைச்சொல்)


தன்னுடைய
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து (குறுகி)
ஒலிப்பது

குற்றியலிகரம்


அது
(குற்றியலிகரம்)

குற்றியலுகரம்
முப்பத்தாறாலும் (36)

அசைச்சொல்
மியாவினாலும் (1)

முப்பத்தேழாய் (37)
வரும்


நன்னூல்
சூத்திரம்-93


யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும்
அசைச்சொன் மியாவி னிகரமுங் குறிய

யகரம் வரக்குற ள்உத்திரி இகரமும்
அசைச்சொல் மியாவி ன்இகரமும் குறிய

யகரத்தை முதலாகக் கொண்ட சொல் வந்து
புணர நிலைமொழி ஈற்றுக்கண் நின்ற
குற்றியலுகரம் திரிந்த இகரமும் அசைச்
சொல்லாகிய மியா என்னும் சொல்லினது
மகர ஒற்றின் மேலே நின்ற இகரமும்
தன்னுடைய ஒலிக்கும் கால அளவில்
குறைந்து (குறுகி) ஒலிப்பது குற்றியலிகரம்
ஆகும்.


நினைவு கூர்க:


நன்னூல்
சூத்திரம்-58


மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே

மொழிமுதல் காரண ம்ஆம்அணுத் திரள்ஒலி
எழுத்துஅது முதல்சார் புஎனஇரு வகைத்தே

மொழிக்கு முதற்காரணமான அணுத்திரள்
ஒலியே எழுத்து; அது முதல் சார்பு என
இரு வகையாம்


நன்னூல்
சூத்திரம்-59


உயிரு முடம்புமா முப்பது முதலே

உயிரு ம்உடம்பும்ஆம் முப்பது முதலே

உயிர் எழுத்து (பன்னிரண்டும்)
மெய் எழுத்து (பதினெட்டும்) ஆகிய
முப்பது எழுத்து முதலெழுத்தாம்


நன்னூல்
சூத்திரம்-60


உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்

உயிர்மெய் ஆய்த ம்உயிர்அள புஒற்றுஅள
புஅஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் துஆகும்

உயிர்மெய், ஆய்தம் (தனிநிலை),
உயிரளபெடை (உயிரளபு),
ஒற்றளபெடை (ஒற்றளபு),
குற்றியலிகரம், (அஃகிய இ)
குற்றியலுகரம் (அஃகிய உ),
ஐகாரக்குறுக்கம் (அஃகிய ஐ),
ஔகாரக்குறுக்கம் (அஃகிய ஔ),
மகரக்குறுக்கம் (அஃகிய மஃகான்),
ஆய்தக்குறுக்கம் (அஃகிய தனிநிலை)
ஆகிய பத்தும் சார்பெழுத்து ஆகும்.


நன்னூல்
சூத்திரம்-61


உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை
ஆறே ழஃகு மிம்முப் பானேழ்
உகர மாறா றைகான் மூன்றே
ஔகா னொன்றே மஃகான் மூன்றே
ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப

உயிர்மெய் இரட்டுநூற் றுஎட்டுஉய ர்ஆய்தம்
எட்டுஉயி ர்அளபுஎழு மூன்றுஒற் றுஅளபெடை
ஆறுஏ ழ்அஃகு ம்இம்முப் பான்ஏழ்
உகர ம்ஆறுஆ றுஐகான் மூன்றே
ஔகா ன்ஒன்றே மஃகான் மூன்றே
ஆய்த ம்இரண்டொடு சார்பெழுத் துஉறுவிரி
ஒன்றுஒழி முந்நூற் றுஎழுபா ன்என்ப

உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு; குறுகாத
ஆய்தம் எட்டு; உயிரளபெடை இருபத்தொன்று;
ஒற்றளபெடை நாற்பத்திரண்டு; குற்றியலிகரம்
முப்பத்தேழு; குற்றியலுகரம் முப்பத்தாறு;
ஐகாரக்குறுக்கம் மூன்று; ஔகாரக்குறுக்கம்
ஒன்று; மகரக்குறுக்கம் மூன்று; ஆய்தக்குறுக்கம்
இரண்டோடு சார்பெழுத்தின் மிகுந்த விரி
ஒன்று குறைந்த முந்நூற்றெழுபது அதாவது
முந்நூற்று அறுபத்தொன்பது என்பர்.



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu


தமிழ் இலக்கணம் சார்பெழுத்து குற்றியலிகரம்

Tamil Grammar Secondary Letter Shortened i 



No comments:

Post a Comment