Monday, January 27, 2020

51) நன்னூல் தற்சிறப்புப்பாயிரம்


தெய்வ வணக்கமும்
செயப்படு பொருளும்
(நூல் நுவலும் பொருள்)
எய்த
உரைப்பது

தற்சிறப்புப்பாயிரம்


வழிபடும்
தெய்வத்திற்கு

வணக்கம்
செய்து

மங்கலச்
சொல்லை

முதலாக
வகுத்து

செய்தற்கு
எடுத்த

இலக்கணம்
இலக்கியம்

இடுக்கண்
இன்றி
இனிது முடியும்

என்னும்
திடமான
நம்பிக்கையுடன்


பூக்கள்
நிறைந்த

அசோக
மரத்தினது

அலங்கரிக்கும்
நிழலின்கண்

அமர்ந்திருக்கும்
நான்முகனைத்

தொழுது
வணங்கி


தமிழ்
மொழிக்கு

அடிப்படையாக
அமைந்த


ஒலிகளைக்
குறிக்கவும்

அந்த
ஒலிகளுக்கு
உண்டான

வரி
வடிவத்தைக்
குறிக்கவும்

பயன்படுகின்ற


எழுத்தின்


அகத்திலக்கணம்
புறத்திலக்கணம்

என்னும்
இரு
வகைகளை


எழுத்ததிகாரம்
(Orthography)

என்ற
பெரும்
பிரிவின்கீழ்


எழுத்தியல்
பதவியல்
உயிரீற்றுப் புணரியல்
மெய்யீற்றுப் புணரியல்
உருபு புணரியல்

என்ற
ஐந்து
சிறு பிரிவுகள்
கொண்டு


202
சூத்திரங்கள்
மூலம்

யாவரும்
அறிய

நன்றாக
நவில்வேன்



நன்னூல்
சூத்திரம்-56


பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த
நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே

பூமலி அசோகின் புனைநிழ ல்அமர்ந்த
நான்முகன் தொழுதுநன் குஇயம்புவ ன்எழுத்தே

பூக்கள் நிறைந்த அசோக மரத்தினது
அலங்கரிக்கும் நிழலின்கண் அமர்ந்திருக்கும்
நான்முகனைத் தொழுது வணங்கி நன்றாக
சொல்வேன் எழுத்து இலக்கணம்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் நன்னூல் - எழுத்ததிகாரம் - கடவுள் வணக்கம்

Tamil Grammar Nannool/Nannul Orthography - Praise Of God/Invocation




50) நன்னூலின் சிறப்புப்பாயிரம்


பரந்து விரிந்த
பாரினில்

நிறைந்த இருள்
நீங்கும்படி

விளங்கா
நின்ற கதிரை
விரித்து

பொருள்
அனைத்தையும்
விளங்கக்
காட்டிடும்

கதிரவனைப்
போன்று

அகிலத்திற்கு
தான்
ஒருவனேயாகி

முதலும் முடிவும்
உவமையும் அளவும்
விருப்பும் வெறுப்பும்
நீங்கிய

உயர்ந்த
உன்னதமான
இறைவன்

தன்னுடைய
மலர்ந்த
குணத்தினாலே

மனத்தில்
இருக்கின்ற
அஞ்ஞானம்
நீங்க

பெருமை
பொருந்திய

அறம்
பொருள்
இன்பம்
வீடு

எனும்

நான்கு
பொருள்களையும்

விருப்பமுடன்
அருளித்தந்த

பதினெட்டு
மொழிகளுள்

கிழக்கே
கீழ்கடல்

தெற்கே
கன்னியாகுமரி

மேற்கே
குடக தேசம்

வடக்கே
திருவேங்கடம்

ஆகிய

நான்கு
எல்லைகளுக்கு
உட்பட்ட
நிலத்தில்

வழங்கி
வருகின்ற

தமிழ் எனும்
கடலுள்

எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி

ஆகிய
அரும்பொருள்
ஐந்தையும்

யாவரும்
அறிய

தொகுத்தும்
வகுத்தும்
விரித்தும்
செய்யப்படும்
யாப்பினாலே

பாடித்தருக
என

பகைவரது
பகைமை கெட

அவர்களை
அழித்து

பெருநிலம்
முழுவதையும்

தனதாகக்
கொண்டு

தனது
மதயானைகளை

வெற்றிக்கு
அடையாளமாக

எட்டுத் திக்கும்
நிறுத்திய

வெற்றியையும்

தொன்றுதொட்டு
வந்த
கீர்த்தியையும்

பெருமை
பொருந்திய
வீரக் கழலினையும்

வெண்கொற்றக்
குடையினையும்

மேகம் போல்
கைமாறு கருதாது
கொடுக்கின்ற
கைகளையும்

கோணாத
செங்கோலையும்

உடைய

சீயகங்கன்
என்னும்

அருங்கலைகள்
கற்பதையே
பொழுதுபோக்காக
கொண்டவன்

வீரத்துடன்
போர்புரிந்து
விழுப்புண்களையே
ஆபரணமாக
அணிந்தவன்

கேட்டுக்
கொண்டதன்
காரணமாக

முன்னோர்
சொன்ன
நூல்களின்படி

நன்னூல்
என்னும்
பெயரால்

இந்நூலைச்
செய்தவர்
யாரெனில்

பொன்மதில்
புடைசூழ்ந்த
சனகாபுரத்து

சன்மதி என்னும்
நன்முனி அருளிய

சொல்லுதற்கு
அரிய
சிறப்பினையும்

பவணந்தி
என்னும்
பெயரினையும்

கொண்ட
பெருந்
தவத்தோனே.



நன்னூல்
சிறப்புப்பாயிரம்


மலர்தலை யுலகின் மல்கிரு ளகல
இலகொளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியி னொருதா னாகி முதலீ
றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த
அற்புத மூர்த்திதன் னலர்தரு தன்மையின்
மனவிரு ளிரிய மாண்பொருண் முழுவதும்
முனிவற வருளிய மூவறு மொழியுளும்
குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள்
அரும்பொரு ளைந்தையும் யாவரு முணரத்
தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்
இகலற நூறி யிருநில முழுவதும்
தனதெனக் கோலித் தன்மத வாரணம்
திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை விநோத னமரா பரணன்
மொழிந்தன னாக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனே


மலர்தலை உலகின் மல்குஇரு ள்அகல
இலகுஒளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியி ன்ஒருதா ன்ஆகி முதல்ஈ
றுஒப்புஅள வுஆசை முனிவுஇகந் துஉயர்ந்த
அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின்
மனஇரு ள்இரிய மாண்பொருள் முழுவதும்
முனிவுஅற அருளிய மூஅறு மொழியுளும்
குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனும்நான் குஎல்லையி ன்இருந்தமிழ்க் கடலுள்
அரும்பொரு ள்ஐந்தையும் யாவரு ம்உணரத்
தொகைவகை விரியின் தருகஎனத் துன்னார்
இகல்அற நூறி இருநில ம்முழுவதும்
தனதுஎனக் கோலித் தன்மத வாரணம்
திசைதொறு நிறுவிய திறல்உறு தொல்சீர்க்
கரும்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
திருந்திய செங்கோல் சீய கங்கன்
அருங்கலை விநோத ன்அமர்ஆ பரணன்
மொழிந்தன ன்ஆக முன்னோர் நூலின்
வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன்
பொன்மதில் சனகைச் சன்மதி முனிஅருள்
பன்அரும் சிறப்பின் பவணந்தி
என்னும் நாமத் துஇரும்தவத் தோன்ஏ


பரந்து விரிந்த பாரினில் நிறைந்த இருள்
நீங்கும்படி விளங்கா நின்ற கதிரை விரித்து
பொருள் அனைத்தையும் விளங்கக் காட்டிடும்
கதிரவனைப் போன்று அகிலத்திற்கு தான்
ஒருவனேயாகி முதலும் முடிவும் உவமையும்
அளவும் விருப்பும் வெறுப்பும் நீங்கிய உயர்ந்த
உன்னதமான இறைவன் தன்னுடைய மலர்ந்த
குணத்தினாலே மனத்தில் இருக்கின்ற
அஞ்ஞானம் நீங்க பெருமை பொருந்திய
அறம் பொருள் இன்பம் வீடு எனும்
நான்கு பொருள்களையும் விருப்பமுடன்
அருளித்தந்த பதினெட்டு மொழிகளுள்
கிழக்கே கீழ்கடல் தெற்கே கன்னியாகுமரி
மேற்கே குடக தேசம் வடக்கே திருவேங்கடம்
ஆகிய நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட 
நிலத்தில் வழங்கி வருகின்ற தமிழ் எனும் 
கடலுள் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி 
ஆகிய அரும்பொருள் ஐந்தையும் யாவரும்
அறிய தொகுத்தும் வகுத்தும் விரித்தும்
செய்யப்படும் யாப்பினாலே பாடித்தருக என
பகைவரது பகைமை கெட அவர்களை அழித்து
பெருநிலம் முழுவதையும் தனதாக கொண்டு
தனது மதயானைகளை வெற்றிக்கு
அடையாளமாக எட்டுத் திக்கும் நிறுத்திய
வெற்றியையும் தொன்றுதொட்டு வந்த
கீர்த்தியையும் பெருமை பொருந்திய
வீரக்கழலினையும் வெண்கொற்றக்
குடையினையும் மேகம் போல் கைமாறு கருதாது
கொடுக்கின்ற கைகளையும் கோணாத
செங்கோலையும் உடைய சீயகங்கன் என்னும்
அருங்கலைகள் கற்பதையே பொழுதுபோக்காக
கொண்டவன் வீரத்துடன் போர்புரிந்து
விழுப்புண்களையே ஆபரணமாக அணிந்தவன்
கேட்டுக் கொண்டதன் காரணமாக முன்னோர்
சொன்ன நூல்களின்படி நன்னூல் என்னும்
பெயரால் இந்நூலைச் செய்தவர் யாரெனில்
பொன்மதில் புடைசூழ்ந்த சனகாபுரத்து சன்மதி
என்னும் நன்முனி அருளிய சொல்லுதற்கு
அரிய சிறப்பினையும் பவணந்தி என்னும்
பெயரினையும் கொண்ட பெருந் தவத்தோனே



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் நன்னூலின் சிறப்புப்பாயிரம்

Tamil Grammar – Nannool/Nannul - Special Preface




49) சிறப்புப்பாயிரத்தின் முக்கியத்துவம்


எந்நூல்
உரைப்பினும்
அந்நூற்கு
பாயிரம்
உரைத்து
உரைக்க

என்பது
தொல்தமிழ் வழக்கு


ஆம்...


ஒரு நூலுக்கு
இன்றியமையாதது
எனக்
கருதப்படுவது

பாயிரம்

(ஒரு நூலுக்கு
முன்னுரை போல்
அமையும் பகுதி)


நன்னூல்
ஆசிரியர்
பவணந்தி முனிவர்

இதன்
முக்கியத்துவம்
பற்றி
குறிப்பிடுகையில்

ஆயிரம் முகத்தான்
அகன்றது ஆயினும்
பாயிரம் இல்லது
பனுவல் அன்றே

(பனுவல்
நூல் / புத்தகம்)

என
எடுத்துரைக்கின்றார்


அதாவது

ஆயிரம் உறுப்புகளால்
விரிந்தது ஆயினும்
பாயிரம் இல்லாதது
நூல் அன்று

என்பது
இதன் பொருள்


இங்கு

பாயிரம்
என்று கூறப்படுவது
சிறப்புப்பாயிரம்
என்று உணர்க


மாளிகைக்கு
ஓவியமும்

மாநகர்க்குக்
கோபுரமும்

ஆடல் மங்கைக்கு
ஆபரணமும்

எவ்வாறு
மெருகூட்டுமோ

அதனைப்போல்
நினைத்து

நூலுக்குரிய
முக்கியமான
விவரங்களை
உள்ளடக்கிய

சிறப்புப்பாயிரத்தையும்

எவ்வகைப்பட்ட
நூல்களுக்கும்
சேர்த்துரைத்து

பெருமை
உடையதாக
வைத்தார்கள்
அறிவுடையோர்



நன்னூல்
சூத்திரம்-54

ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே

ஆயிர ம்முகத்தா ன்அகன்ற துஆயினும்
பாயிர ம்இல்லது பனுவ ல்அன்றே

ஆயிரம் உறுப்புகளால் விரிந்தது ஆயினும்
பாயிரம் இல்லாதது நூல் அன்று


நன்னூல்
சூத்திரம்-55

மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல் - - நாடிமுன்
ஐதுரையா நின்ற வணிந்துரையை யெந்நூற்கும்
பெய்துறையா வைத்தார் பெரிது

மாடக்குச் சித்திரமு ம்மாநகர்க்குக் கோபுரமும்
ஆடுஅமைத்தோ ள்நல்லார்க் குஅணியும்போல் - நாடிமுன்
ஐதுஉரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்
பெய்துஉறையா வைத்தார் பெரிது

மாளிகைக்கு ஓவியமும்; மாநகர்க்குக் கோபுரமும்;
நாட்டியம் செய்கின்ற மூங்கில்போல்
தோள்களை உடைய மங்கையர்க்கு ஆபரணமும்
(மெருகூட்டுவது) போல் நினைத்து அழகிய
பொருளைச் சொல்கின்ற பாயிரத்தையும்
எவ்வகைப்பட்ட நூல்களுக்கும் சேர்த்துரைத்து
பெருமை உடையதாக வைத்தார்கள்
அறிவுடையோர்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் சிறப்புப்பாயிரத்தின் முக்கியத்துவம்

Tamil Grammar – No Classic Without A Preface





48) தற்புகழ்ச்சி குற்றமாகா இடங்கள்


பிறர்க்குத்
தோன்றாத
பொருள்களைத்

தான்
தோன்றச்
செய்து

துறைகள்
பலவற்றைச்
சார்ந்து

மிகச்
சிறந்ததொரு
நூலைச்
செய்திருப்பினும்

தானே
தன்னைப்
புகழ்ந்து கொள்வது
தகுதியில்லை


என்பதால்


நூலுக்கான
சிறப்புப்பாயிரத்தை


நூல் செய்தோனின்
ஆசிரியர்

நூல் செய்தோனோடு
கற்றவர்

நூல் செய்தோனின்
மாணாக்கர்

நூலுக்குத்
தகுந்த உரையைச்
செய்திடும்
தகுதி உடையவர்

எனும்
நால்வருள் ஒருவர்

சொல்லுதலே
முறைமை


இருப்பினும்


அரசனது அவைக்கு
தன்னைப்பற்றி
எழுதிடும்
விண்ணப்பக்கவியிலும்

தன்னுடைய
கல்வித் திறனை
அறியாதவரிடத்திலும்

கற்றறிந்தார் சபையில்
வாதம் செய்து
வெல்லும் போதிலும்

தன்னை எதிரணி
இகழ்ந்து
பேசும் காலத்திலும்

தன்னைத்தான்
புகழ்ந்து கொள்ளுதலும்
தகுந்தது
புலவர்க்கே.



நன்னூல்
சூத்திரம்-53

மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும்
தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும்
மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலுந் தகும் புலவோற்கே

மன்னுடை மன்றத் துஓலைத் தூக்கினும்
தன்னுடை ஆற்ற ல்உணரா ர்இடையினும்
மன்னிய அவைஇடை வெல்உறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே

அரசனது அவைக்கு (தன்னைப்பற்றி
எழுதிடும்) விண்ணப்பக்கவியிலும்;
தன்னுடைய (கல்வித்) திறனை
அறியாதவரிடத்திலும்; கற்றறிந்தார்
சபையில் (வாதம் செய்து) வெல்லும்
போதிலும்; தன்னை எதிரணி இகழ்ந்து
பேசும் காலத்திலும் தன்னைத்தான் 
புகழ்ந்து கொள்ளுதலும் தகுந்தது புலவர்க்கே.



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் தற்புகழ்ச்சி குற்றமாகா இடங்கள்

Tamil Grammar When A Man May Praise Himself




47) சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியோர்


ஒரு நூலுக்கு
இன்றியமையாதது
எனக்
கருதப்படுவது

பாயிரம்

(ஒரு நூலுக்கு
முன்னுரை போல்
அமையும் பகுதி)


அது
(பாயிரம்)

ஒரு நூலில்

சிறப்புப்பாயிரம்
பொதுப்பாயிரம்

என
இருவகைகளில்
அமையும்


சிறப்புப்பாயிரம்
என்பது

அது
இடம்பெறும்
நூலுக்குரிய
முக்கியமான
விவரங்கள் கொண்டு
அமைவது


பொதுப்பாயிரம்
என்பது

பொதுவாக
எல்லா
நூல்களுக்கும்
உரிய
பொதுவான
விவரங்கள் கூறி
அமைவது


இவற்றுள்
ஒன்றான
சிறப்புப்பாயிரம்

ஒரு நூலில்
இடம் பெறும்போது

தன்னிடத்தில்
கொண்டிருக்க
வேண்டிய

அந்நூலுக்குரிய
முக்கியமான விவரங்கள்
எட்டு


அவைகள்
முறையே


1)    நூல் ஆசிரியரின் பெயர்

2)   நூல் வந்த வழி

3)    நூல் வழங்கும் நில எல்லை

4)   நூலிற்குச் சூட்டப்பட்ட தலைப்பு

5)   நூல் ஆக்கப்பட்ட முறை

6)   நூலில் சொல்லப்பட்ட பொருள்

7)   நூல் பொருள் கேட்போர்

8)    நூலால் விளையும் பயன்


இவற்றுடன்


9)    நூல் தோன்றிய காலம்

10)  நூல் அரங்கேறிய சபை

11)   நூல் இயற்றியதன் காரணம்


என்னும்
இந்த மூன்றையும்
சேர்த்துப்

பதினொன்று
என்று
கூறுபவர்களும்
உண்டு


பிறர்க்குத்
தோன்றாத
பொருள்களைத்

தான்
தோன்றச்
செய்து

துறைகள்
பலவற்றைச்
சார்ந்து

மிகச்
சிறந்ததொரு
நூலைச்
செய்திருப்பினும்

தானே
தன்னைப்
புகழ்ந்து கொள்வது
தகுதியில்லை


என்பதால்


நூலுக்கான
சிறப்புப்பாயிரத்தை


நூல் செய்தோனின்
ஆசிரியர்

நூல் செய்தோனுடன்
கற்றவர்

நூல் செய்தோனின்
மாணாக்கர்

நூலுக்குத்
தகுந்த உரையைச்
செய்திடும்
தகுதி உடையவர்

எனும்
நால்வருள் ஒருவர்

சொல்லுதலே
முறைமை



நன்னூல்
சூத்திரம்-51

தன்னா சிரியன் றன்னொடு கற்றோன்
தன்மா ணாக்கன் றகுமுரை காரனென்
றின்னோர் பாயிர மியம்புதல் கடனே

தன்ஆ சிரியன் தன்ஒடு கற்றோன்
தன்மா ணாக்கன் தகும்உரை காரன்என்
றுஇன்னோர் பாயிர ம்இயம்புதல் கடனே

நூல் செய்தோனின் ஆசிரியர்; நூல்
செய்தோனோடு கற்றவர்; நூல்
செய்தோனின் மாணாக்கர்; நூலுக்குத்
தகுந்த உரையைச் செய்திடும் தகுதி
உடையவர் எனும் நால்வருள் ஒருவர்
சொல்லுதலே முறைமை.


நன்னூல்
சூத்திரம்-52

தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்றற் புகழ்த றகுதி யன்றே

தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்தன் புகழ்த ல்தகுதி அன்றுஏ.


(பிறர்க்குத்) தோன்றாத பொருள்களைத்
(தான்) தோன்றச் செய்து துறைகள்
பலவற்றைச் (சார்ந்து மிகச் சிறந்ததொரு
நூலைச்) செய்திருப்பினும் தானே தன்னைப்
புகழ்ந்து கொள்வது தகுதியில்லை



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியோர்

Tamil Grammar Who Must Write The Preface