Monday, January 27, 2020

49) சிறப்புப்பாயிரத்தின் முக்கியத்துவம்


எந்நூல்
உரைப்பினும்
அந்நூற்கு
பாயிரம்
உரைத்து
உரைக்க

என்பது
தொல்தமிழ் வழக்கு


ஆம்...


ஒரு நூலுக்கு
இன்றியமையாதது
எனக்
கருதப்படுவது

பாயிரம்

(ஒரு நூலுக்கு
முன்னுரை போல்
அமையும் பகுதி)


நன்னூல்
ஆசிரியர்
பவணந்தி முனிவர்

இதன்
முக்கியத்துவம்
பற்றி
குறிப்பிடுகையில்

ஆயிரம் முகத்தான்
அகன்றது ஆயினும்
பாயிரம் இல்லது
பனுவல் அன்றே

(பனுவல்
நூல் / புத்தகம்)

என
எடுத்துரைக்கின்றார்


அதாவது

ஆயிரம் உறுப்புகளால்
விரிந்தது ஆயினும்
பாயிரம் இல்லாதது
நூல் அன்று

என்பது
இதன் பொருள்


இங்கு

பாயிரம்
என்று கூறப்படுவது
சிறப்புப்பாயிரம்
என்று உணர்க


மாளிகைக்கு
ஓவியமும்

மாநகர்க்குக்
கோபுரமும்

ஆடல் மங்கைக்கு
ஆபரணமும்

எவ்வாறு
மெருகூட்டுமோ

அதனைப்போல்
நினைத்து

நூலுக்குரிய
முக்கியமான
விவரங்களை
உள்ளடக்கிய

சிறப்புப்பாயிரத்தையும்

எவ்வகைப்பட்ட
நூல்களுக்கும்
சேர்த்துரைத்து

பெருமை
உடையதாக
வைத்தார்கள்
அறிவுடையோர்



நன்னூல்
சூத்திரம்-54

ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே

ஆயிர ம்முகத்தா ன்அகன்ற துஆயினும்
பாயிர ம்இல்லது பனுவ ல்அன்றே

ஆயிரம் உறுப்புகளால் விரிந்தது ஆயினும்
பாயிரம் இல்லாதது நூல் அன்று


நன்னூல்
சூத்திரம்-55

மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல் - - நாடிமுன்
ஐதுரையா நின்ற வணிந்துரையை யெந்நூற்கும்
பெய்துறையா வைத்தார் பெரிது

மாடக்குச் சித்திரமு ம்மாநகர்க்குக் கோபுரமும்
ஆடுஅமைத்தோ ள்நல்லார்க் குஅணியும்போல் - நாடிமுன்
ஐதுஉரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்
பெய்துஉறையா வைத்தார் பெரிது

மாளிகைக்கு ஓவியமும்; மாநகர்க்குக் கோபுரமும்;
நாட்டியம் செய்கின்ற மூங்கில்போல்
தோள்களை உடைய மங்கையர்க்கு ஆபரணமும்
(மெருகூட்டுவது) போல் நினைத்து அழகிய
பொருளைச் சொல்கின்ற பாயிரத்தையும்
எவ்வகைப்பட்ட நூல்களுக்கும் சேர்த்துரைத்து
பெருமை உடையதாக வைத்தார்கள்
அறிவுடையோர்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் சிறப்புப்பாயிரத்தின் முக்கியத்துவம்

Tamil Grammar – No Classic Without A Preface





No comments:

Post a Comment