Monday, January 27, 2020

41) கற்கும் இயல்பு


காலத்தையும்
இடத்தையும்
தூயதாகத்
தேர்ந்தெடுத்தும்

மேன்மையான
இடத்திலிருந்தும்

தான் வழிபடும்
கடவுளைத்
துதித்து வணங்கியும்

தன்னால்
சொல்லப்படுவதாகிய
நூற்பொருளைத்
தனது மனத்துள்ளே
நிறைத்தும்

துரிதப்
படாதவனாகவும்

கோபப்
படாதவனாகவும்

கற்பிப்பதில்
விருப்பம் கொண்டும்

இன்முகத்துடனும்

மாணவன்
கொளத்தகும் அறிவு
இவ்வளவு
என அறிந்து
அவன் அறிவு
ஏற்கும்படியாகவும்

மாறுபாடில்லாத
மனத்துடனும்

நூல் பொருளைக்
கற்பித்தல்

என்பது

அறிவுடையோர்
குறிப்பிடும்

ஆசிரியரின்

கற்பிக்கும்
இயல்புகள்


அதனைப்
போன்றே


இங்கு நாம்

மாணாக்கரின்

கற்கும்
இயல்புகளையும்

சற்று
விரிவாக
அறிவோம்


காலத்தோடு
சென்றும்

வழிபாடு
செய்வதில்
வெறுப்பு
இல்லாதவனாகவும்

நற்குணத்தோடு
பழகியும்

ஆசிரியர்
குறிப்பினை
உணர்ந்து

அவர்
(ஆசிரியர்)

இரு
என்றால்
இருந்தும்

சொல்
என்றால்
சொல்லியும்

பசித்து
உண்பவனுக்கு
உணவின்மேல்
உள்ள
ஆசை போல்

பாடம்
கேட்டலில்
ஆர்வம்
உடையவனாகவும்

சித்திரப்பாவை
போன்று
அசைவறு
குணங்கொண்டு
அடங்கியும்

காதானது
வாயாகவும்

மனமானது
கொள்ளும்
இடமாகவும்

கேட்டவற்றை
விளங்கும்படி
கேட்டு
அவற்றை
மறந்துவிடாது
உள்ளத்தில்
நிறைத்தும்

போ
என்றால்
போகுதலும்

மாணாக்கரின்

கற்கும்
இயல்புகள்

என்று

சொல்லுவர்
அறிவுடையோர்



நன்னூல்
சூத்திரம்-40


கோடன் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்
திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவ னன்னவார் வத்த னாகிச்
சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போத லென்மனார் புலவர்

கோடல் மரபே கூறும் காலைப்
பொழுதுஒடு சென்று வழிபடல் முனியான்
குணத்துஒடு பழகி அவன்குறிப் பின்சார்ந்து
இருஎன இருந்து சொல்எனச் சொல்லிப்
பருகுவன் அன்னஆர் வத்த ன்ஆகிச்
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவிவாய் ஆக நெஞ்சுகளன் ஆகக்
கேட்டவை கேட்டுஅவை விடாதுஉளத்து அமைத்துப்
போஎனப் போதல் என்மனார் புலவர்

கற்றல் இயல்பினைச் சொல்லவதென்றால்
(அது) காலத்தோடு சென்று: வழிபடுதலில்
வெறுப்பில்லாதவனாய்: குணத்தோடு பழகி:
ஆசிரியர் குறிப்பினைச் சார்ந்து: இரு
என்றால் இருந்து: ,சொல் என்றால் சொல்லி:
பசித்து உண்பவன் போல் (பாடம் கேட்டலில்)
ஆர்வம் உடையவனாக: காதானது வாயாக:
மனமானது கொள்ளுமிடமாக;
கேட்டவற்றைக் கேட்டு: அவற்றை மறந்து
விடாது உள்ளத்தில் நிறைத்து: போ என்றால்
போகுதல் என்று சொல்லுவர் புலவர்.



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் கற்கும் இயல்பு

Tamil Grammar The Way To Learn 




No comments:

Post a Comment