Monday, January 27, 2020

47) சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியோர்


ஒரு நூலுக்கு
இன்றியமையாதது
எனக்
கருதப்படுவது

பாயிரம்

(ஒரு நூலுக்கு
முன்னுரை போல்
அமையும் பகுதி)


அது
(பாயிரம்)

ஒரு நூலில்

சிறப்புப்பாயிரம்
பொதுப்பாயிரம்

என
இருவகைகளில்
அமையும்


சிறப்புப்பாயிரம்
என்பது

அது
இடம்பெறும்
நூலுக்குரிய
முக்கியமான
விவரங்கள் கொண்டு
அமைவது


பொதுப்பாயிரம்
என்பது

பொதுவாக
எல்லா
நூல்களுக்கும்
உரிய
பொதுவான
விவரங்கள் கூறி
அமைவது


இவற்றுள்
ஒன்றான
சிறப்புப்பாயிரம்

ஒரு நூலில்
இடம் பெறும்போது

தன்னிடத்தில்
கொண்டிருக்க
வேண்டிய

அந்நூலுக்குரிய
முக்கியமான விவரங்கள்
எட்டு


அவைகள்
முறையே


1)    நூல் ஆசிரியரின் பெயர்

2)   நூல் வந்த வழி

3)    நூல் வழங்கும் நில எல்லை

4)   நூலிற்குச் சூட்டப்பட்ட தலைப்பு

5)   நூல் ஆக்கப்பட்ட முறை

6)   நூலில் சொல்லப்பட்ட பொருள்

7)   நூல் பொருள் கேட்போர்

8)    நூலால் விளையும் பயன்


இவற்றுடன்


9)    நூல் தோன்றிய காலம்

10)  நூல் அரங்கேறிய சபை

11)   நூல் இயற்றியதன் காரணம்


என்னும்
இந்த மூன்றையும்
சேர்த்துப்

பதினொன்று
என்று
கூறுபவர்களும்
உண்டு


பிறர்க்குத்
தோன்றாத
பொருள்களைத்

தான்
தோன்றச்
செய்து

துறைகள்
பலவற்றைச்
சார்ந்து

மிகச்
சிறந்ததொரு
நூலைச்
செய்திருப்பினும்

தானே
தன்னைப்
புகழ்ந்து கொள்வது
தகுதியில்லை


என்பதால்


நூலுக்கான
சிறப்புப்பாயிரத்தை


நூல் செய்தோனின்
ஆசிரியர்

நூல் செய்தோனுடன்
கற்றவர்

நூல் செய்தோனின்
மாணாக்கர்

நூலுக்குத்
தகுந்த உரையைச்
செய்திடும்
தகுதி உடையவர்

எனும்
நால்வருள் ஒருவர்

சொல்லுதலே
முறைமை



நன்னூல்
சூத்திரம்-51

தன்னா சிரியன் றன்னொடு கற்றோன்
தன்மா ணாக்கன் றகுமுரை காரனென்
றின்னோர் பாயிர மியம்புதல் கடனே

தன்ஆ சிரியன் தன்ஒடு கற்றோன்
தன்மா ணாக்கன் தகும்உரை காரன்என்
றுஇன்னோர் பாயிர ம்இயம்புதல் கடனே

நூல் செய்தோனின் ஆசிரியர்; நூல்
செய்தோனோடு கற்றவர்; நூல்
செய்தோனின் மாணாக்கர்; நூலுக்குத்
தகுந்த உரையைச் செய்திடும் தகுதி
உடையவர் எனும் நால்வருள் ஒருவர்
சொல்லுதலே முறைமை.


நன்னூல்
சூத்திரம்-52

தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்றற் புகழ்த றகுதி யன்றே

தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்தன் புகழ்த ல்தகுதி அன்றுஏ.


(பிறர்க்குத்) தோன்றாத பொருள்களைத்
(தான்) தோன்றச் செய்து துறைகள்
பலவற்றைச் (சார்ந்து மிகச் சிறந்ததொரு
நூலைச்) செய்திருப்பினும் தானே தன்னைப்
புகழ்ந்து கொள்வது தகுதியில்லை



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியோர்

Tamil Grammar Who Must Write The Preface




No comments:

Post a Comment