Monday, January 27, 2020

50) நன்னூலின் சிறப்புப்பாயிரம்


பரந்து விரிந்த
பாரினில்

நிறைந்த இருள்
நீங்கும்படி

விளங்கா
நின்ற கதிரை
விரித்து

பொருள்
அனைத்தையும்
விளங்கக்
காட்டிடும்

கதிரவனைப்
போன்று

அகிலத்திற்கு
தான்
ஒருவனேயாகி

முதலும் முடிவும்
உவமையும் அளவும்
விருப்பும் வெறுப்பும்
நீங்கிய

உயர்ந்த
உன்னதமான
இறைவன்

தன்னுடைய
மலர்ந்த
குணத்தினாலே

மனத்தில்
இருக்கின்ற
அஞ்ஞானம்
நீங்க

பெருமை
பொருந்திய

அறம்
பொருள்
இன்பம்
வீடு

எனும்

நான்கு
பொருள்களையும்

விருப்பமுடன்
அருளித்தந்த

பதினெட்டு
மொழிகளுள்

கிழக்கே
கீழ்கடல்

தெற்கே
கன்னியாகுமரி

மேற்கே
குடக தேசம்

வடக்கே
திருவேங்கடம்

ஆகிய

நான்கு
எல்லைகளுக்கு
உட்பட்ட
நிலத்தில்

வழங்கி
வருகின்ற

தமிழ் எனும்
கடலுள்

எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி

ஆகிய
அரும்பொருள்
ஐந்தையும்

யாவரும்
அறிய

தொகுத்தும்
வகுத்தும்
விரித்தும்
செய்யப்படும்
யாப்பினாலே

பாடித்தருக
என

பகைவரது
பகைமை கெட

அவர்களை
அழித்து

பெருநிலம்
முழுவதையும்

தனதாகக்
கொண்டு

தனது
மதயானைகளை

வெற்றிக்கு
அடையாளமாக

எட்டுத் திக்கும்
நிறுத்திய

வெற்றியையும்

தொன்றுதொட்டு
வந்த
கீர்த்தியையும்

பெருமை
பொருந்திய
வீரக் கழலினையும்

வெண்கொற்றக்
குடையினையும்

மேகம் போல்
கைமாறு கருதாது
கொடுக்கின்ற
கைகளையும்

கோணாத
செங்கோலையும்

உடைய

சீயகங்கன்
என்னும்

அருங்கலைகள்
கற்பதையே
பொழுதுபோக்காக
கொண்டவன்

வீரத்துடன்
போர்புரிந்து
விழுப்புண்களையே
ஆபரணமாக
அணிந்தவன்

கேட்டுக்
கொண்டதன்
காரணமாக

முன்னோர்
சொன்ன
நூல்களின்படி

நன்னூல்
என்னும்
பெயரால்

இந்நூலைச்
செய்தவர்
யாரெனில்

பொன்மதில்
புடைசூழ்ந்த
சனகாபுரத்து

சன்மதி என்னும்
நன்முனி அருளிய

சொல்லுதற்கு
அரிய
சிறப்பினையும்

பவணந்தி
என்னும்
பெயரினையும்

கொண்ட
பெருந்
தவத்தோனே.



நன்னூல்
சிறப்புப்பாயிரம்


மலர்தலை யுலகின் மல்கிரு ளகல
இலகொளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியி னொருதா னாகி முதலீ
றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த
அற்புத மூர்த்திதன் னலர்தரு தன்மையின்
மனவிரு ளிரிய மாண்பொருண் முழுவதும்
முனிவற வருளிய மூவறு மொழியுளும்
குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள்
அரும்பொரு ளைந்தையும் யாவரு முணரத்
தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்
இகலற நூறி யிருநில முழுவதும்
தனதெனக் கோலித் தன்மத வாரணம்
திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை விநோத னமரா பரணன்
மொழிந்தன னாக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனே


மலர்தலை உலகின் மல்குஇரு ள்அகல
இலகுஒளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியி ன்ஒருதா ன்ஆகி முதல்ஈ
றுஒப்புஅள வுஆசை முனிவுஇகந் துஉயர்ந்த
அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின்
மனஇரு ள்இரிய மாண்பொருள் முழுவதும்
முனிவுஅற அருளிய மூஅறு மொழியுளும்
குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனும்நான் குஎல்லையி ன்இருந்தமிழ்க் கடலுள்
அரும்பொரு ள்ஐந்தையும் யாவரு ம்உணரத்
தொகைவகை விரியின் தருகஎனத் துன்னார்
இகல்அற நூறி இருநில ம்முழுவதும்
தனதுஎனக் கோலித் தன்மத வாரணம்
திசைதொறு நிறுவிய திறல்உறு தொல்சீர்க்
கரும்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
திருந்திய செங்கோல் சீய கங்கன்
அருங்கலை விநோத ன்அமர்ஆ பரணன்
மொழிந்தன ன்ஆக முன்னோர் நூலின்
வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன்
பொன்மதில் சனகைச் சன்மதி முனிஅருள்
பன்அரும் சிறப்பின் பவணந்தி
என்னும் நாமத் துஇரும்தவத் தோன்ஏ


பரந்து விரிந்த பாரினில் நிறைந்த இருள்
நீங்கும்படி விளங்கா நின்ற கதிரை விரித்து
பொருள் அனைத்தையும் விளங்கக் காட்டிடும்
கதிரவனைப் போன்று அகிலத்திற்கு தான்
ஒருவனேயாகி முதலும் முடிவும் உவமையும்
அளவும் விருப்பும் வெறுப்பும் நீங்கிய உயர்ந்த
உன்னதமான இறைவன் தன்னுடைய மலர்ந்த
குணத்தினாலே மனத்தில் இருக்கின்ற
அஞ்ஞானம் நீங்க பெருமை பொருந்திய
அறம் பொருள் இன்பம் வீடு எனும்
நான்கு பொருள்களையும் விருப்பமுடன்
அருளித்தந்த பதினெட்டு மொழிகளுள்
கிழக்கே கீழ்கடல் தெற்கே கன்னியாகுமரி
மேற்கே குடக தேசம் வடக்கே திருவேங்கடம்
ஆகிய நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட 
நிலத்தில் வழங்கி வருகின்ற தமிழ் எனும் 
கடலுள் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி 
ஆகிய அரும்பொருள் ஐந்தையும் யாவரும்
அறிய தொகுத்தும் வகுத்தும் விரித்தும்
செய்யப்படும் யாப்பினாலே பாடித்தருக என
பகைவரது பகைமை கெட அவர்களை அழித்து
பெருநிலம் முழுவதையும் தனதாக கொண்டு
தனது மதயானைகளை வெற்றிக்கு
அடையாளமாக எட்டுத் திக்கும் நிறுத்திய
வெற்றியையும் தொன்றுதொட்டு வந்த
கீர்த்தியையும் பெருமை பொருந்திய
வீரக்கழலினையும் வெண்கொற்றக்
குடையினையும் மேகம் போல் கைமாறு கருதாது
கொடுக்கின்ற கைகளையும் கோணாத
செங்கோலையும் உடைய சீயகங்கன் என்னும்
அருங்கலைகள் கற்பதையே பொழுதுபோக்காக
கொண்டவன் வீரத்துடன் போர்புரிந்து
விழுப்புண்களையே ஆபரணமாக அணிந்தவன்
கேட்டுக் கொண்டதன் காரணமாக முன்னோர்
சொன்ன நூல்களின்படி நன்னூல் என்னும்
பெயரால் இந்நூலைச் செய்தவர் யாரெனில்
பொன்மதில் புடைசூழ்ந்த சனகாபுரத்து சன்மதி
என்னும் நன்முனி அருளிய சொல்லுதற்கு
அரிய சிறப்பினையும் பவணந்தி என்னும்
பெயரினையும் கொண்ட பெருந் தவத்தோனே



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் நன்னூலின் சிறப்புப்பாயிரம்

Tamil Grammar – Nannool/Nannul - Special Preface




No comments:

Post a Comment