Friday, December 27, 2019

33) ஆசிரியர் ஆகாதவர் இயல்பு-2


போதிக்கும்
குணமில்லாதவர்

இழிந்த குணத்தை
இயல்பாகக் கொண்டவர்

பொறாமை
ஆசை
வஞ்சம்
அச்சம்
ஆளுமை
ஆகியவற்றைத்
தன்னிடம் கொண்டவர்

கழற்குடம்
மடல்பனை
பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு
ஆகியவற்றுக்கு
ஒப்பென்று சொல்லும்படி
மாறுபாடு கொண்ட
சிந்தனை உடையவர்

ஆசிரியர் ஆகும்
தகுதி இல்லாதவர்


இங்கு
ஆசிரியர் ஆகாதவர்
இயல்புகளில்
ஒன்றான


கழற்குடம்
மடல்பனை
பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு
ஆகியவற்றுக்கு
ஒப்பென்று சொல்லும்படி
மாறுபாடு கொண்ட
சிந்தனை உடையவர்

என்பது
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


போடப்பட்ட
வரிசைப்படி இல்லாமல்
பிறழும்படியாக
விரைந்து கொடுக்கும்
செய்கை கொண்டது

கழற்காய் நிரம்பிய
குடத்தின் குணம்


தானே தந்தால்தான்
பெறமுடியுமே அன்றி
தன்னிடத்தில்
விரும்பிவந்து
பறித்துக்கொள்ள
இடன்கொடாதது

மடல்கள் பெற்ற
பனையின் குணம்


வலிதின் அடைக்கத்
தன்னுள்ளே கொண்டு
அப்பஞ்சைத்
தான் பிறர்க்கு
எளிதில் கொடாதது

பஞ்சு அடைத்த
குடுக்கையின் குணம்


பல்வகையில்
உதவி செய்து
ஆதரித்து
வளர்க்கின்ற தன்மையும்
இல்லாத பிறர்க்கு
தன்னுடைய
பலன்களை அளிப்பது

(வேலிக்கு வெளிப்புறம்)
வளைந்த தென்னை
மரத்தின் குணம்


இவற்றிற்கு
(கழற்குடம் -
மடல்பனை -
பருத்திக் குண்டிகை -
முடத்தெங்கு)
ஒப்பாக


கற்பிக்க வேண்டிய
முறைப்படி இல்லாமல்
பிறழும்படியாக
விரைந்து கற்பிப்பது

தான் சொன்னால்
மட்டுமே
அறியமுடியுமே அன்றி
தன்னை நெருங்கிவந்து
வினவி
அறிந்துக்கொள்ள
இடங்கொடாதது

மாணவர் உணர்வு
பெரியதாயினும்
சிறிதுசிறிதாய்
பாடங்களைக்
கற்றுக்கொடுப்பது

பல்வகையில்
உதவிசெய்து
வணங்கும் தன்மையும்
இல்லாதவர்க்குக்
கல்விப்
பயன்களைத் தருவது


ஆசிரியர் ஆகும்
தகுதி இல்லாதவர் குணம்


நன்னூல்
சூத்திரம்-32


பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றரும்
செய்தி கழற்பெய் குடத்தின் சீரே

பெய்தமுறை அன்றிப் பிறழ உடன்தரும்
செய்தி கழற்பெய் குடத்தின் சீரே

போடப்பட்ட வரிசைப்படி இல்லாமல்
பிறழும்படியாக விரைந்து கொடுக்கும்
செய்கை கொண்டது கழற்காய்
நிரம்பிய குடத்தின் குணம்


நன்னூல்
சூத்திரம்-33


தானே தரக்கொளி னன்றித் தன்பான்
மேவிக் கொளப்படா விடத்தது மடற்பனை

தானே தரக்கொளின் அன்றித் தன்பால்
மேவிக் கொளப்படா இடத்தது மடல்பனை

தானே தந்தால்தான் பெறமுடியுமே
அன்றி தன்னிடத்தில் விரும்பிவந்து
பறித்துக்கொள்ள இடன்கொடாதது 
மடல்கள் பெற்ற பனையின் குணம்


நன்னூல்
சூத்திரம்-34


அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க்
கொளிதீ வில்லது பருத்திக் குண்டிகை

அரிதின் பெயக்கொண்டு அப்பொருள் தான்பிறர்க்கு
எளிது ஈவுஇல்லது பருத்திக் குண்டிகை

வலிதின் அடைக்கத் தன்னுள்ளே 
கொண்டு அப்பஞ்சைத் தான் பிறர்க்கு
எளிதில் கொடாதது பஞ்சு அடைத்த
குடுக்கையின் குணம்


நன்னூல்
சூத்திரம்-35


பல்வகை யுதவி வழிபடு பண்பின்
அல்லோர்க் களிக்கு மதுமுடத் தெங்கே

பல்வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடம் தெங்கே

பல்வகையில் உதவிசெய்து ஆதரித்து
வளர்க்கின்ற தன்மையும் இல்லாத
பிறர்க்கு தன்னுடைய பலன்களை
அளிப்பது (வேலிக்கு வெளிப்புறம்)
வளைந்த தென்னை மரத்தின் குணம்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் ஆசிரியர் ஆகாதவர் இயல்பு 
(கழற்குடம் மடல்பனை பருத்திக் குண்டிகை முடம் தெங்கு)

Tamil Grammar The Bad Qualities Of The Teacher (2)




No comments:

Post a Comment