Friday, December 27, 2019

28) உரை


ஓர்இரு பாயிரம் அமைந்து
மூவகை நூல்களில் ஒன்றாக
நான்கு பொருள் பயனோடு
ஏழு வகை கொள்கைகளைத் தழுவி
பத்துக் குற்றங்கள் இல்லாமல்
பத்து அழகோடு
முப்பத்திரண்டு உத்தியைக் கொண்டு
இயல் அதிகாரம் என்னும் உறுப்புகளில் 
சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகிய 
வேறுபட்ட நடைகளைப் பெறும்

என்பது
நூலின் இயல்புகள்


இவற்றுள்
(நூலின் இயல்புகளில்)
ஒன்றான

சூத்திரம்
காண்டிகை
விருத்தி
ஆகிய
வேறுபட்ட
நடைகளைப்
பெறுவது

என்பதில்

காண்டிகை
(காண்டிகையுரை)

விருத்தி
(விருத்தியுரை)

என்பன குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


அதற்குமுன்
நாம்
அறிய வேண்டியது

உரை


இங்கு


உரை
என்பது
சூத்திரப் பொருள்


அது
(உரை)
பதினான்கு
வகையாம்


ஒன்று

பாடவுரை
(பாடம் உரைத்தல்)


இரண்டு

கருத்துரை
(சுருக்கி உரைத்தல்)


மூன்று

சொல் வகையுரை
(சொல் குறித்து உரைத்தல்)


நான்கு

சொற் பொருளுரை / பதவுரை
(சொற்பொருள் உரைத்தல்)


ஐந்து

தொகுத்துரை / பொழிப்புரை
(தொகுத்து உரைத்தல்)


ஆறு

உதாரணவுரை / மேற்கோளுரை
(எடுத்துக்காட்டுடன் உரைத்தல்)


ஏழு

வினாவுரை
(வினாவி உரைத்தல்)


எட்டு

விடையுரை
(எதிர்மொழி உரைத்தல்)


ஒன்பது

விசேடவுரை
(தந்து / கூட்டி உரைத்தல்)


பத்து

விரிவுரை
(விரித்து உரைத்தல்)


பதினொன்று

அதிகாரவுரை
(அதிகாரத்துடன் பொருத்தி உரைத்தல்)


பன்னிரண்டு

துணிவுரை
(துணிந்து உரைத்தல்)


பதின்மூன்று

பயனுரை
(பயன்சொல்லி உரைத்தல்)


பதினான்கு

ஆசிரிய வசனவுரை
(மேற்கோள் உரைத்தல்)
.

இவற்றுள்


கருத்துரை
சொற் பொருளுரை
உதாரணவுரை
வினாவுரை
விடையுரை

ஆகிய
ஐந்து உரைகளுடன்
சூத்திரப் பொருளைக்
காட்டுவது

காண்டிகையுரை


சூத்திரப் பொருள்
அல்லாமல்
அவ்விடத்துக்கு
இன்றியமையாத
எல்லாப் பொருளும்
விளங்கும்படி

தன்னுரையாலும்
பிற
நூலுரையாலும்
தெளிவு
பெறும்படிக்கு

காண்டிகையின்
ஐவகை
உரைகளுடன்

மெய்பொருளினைக்
குறைவுபடாமற்
கூறுவது

விருத்தியுரை


நன்னூல்
சூத்திரம்-21


பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள்
தொகுத்துரை யுதாரணம் வினாவிடை விசேடம்
விரிவதி காரந் துணிவு பயனோ
டாசிரிய வசனமென் றீரே ழுரையே

பாடம் கருத்தே சொல்வகை சொல்பொருள்
தொகுத்துஉரை உதாரணம் வினாவிடை விசேடம்
விரிவுஅதி காரம் துணிவு பயனோடு
ஆசிரிய வசனம்என்று ஈர்ஏழ் உரையே

பாடம், கருத்து, சொல்வகை, சொற்பொருள், 
தொகுத்துரை, உதாரணம், வினா, விடை, 
விசேடம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன்
ஆகியவற்றோடு ஆசிரிய வசனம் என்று
பதினான்கு உரையே



நன்னூல்
சூத்திரம்-22


கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை யாக்க லானும்
சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை

கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை ஆக்க லானும்
சூத்திரத்து உள்பொருள் தோற்றுவ காண்டிகை

கருத்துப் சொற்பொருள் உதாரணம்  ஆகிய 
மூன்றினாலும் அவற்றோடு வினா, விடை
கூட்டி உரைத்தலாலும் சூத்திரத்தின்
உள்பொருள் காட்டுவது காண்டிகை உரை.



நன்னூல்
சூத்திரம்-23


சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக்
கின்றி யமையா யாவையும் விளங்கத்
தன்னுரை யானும் பிறநூ லானும்
ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு
மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி

சூத்திரத்து உள்பொருள் அன்றியும் ஆண்டைக்கு
இன்றி அமையா யாவையும் விளங்கத்
தன்உரை யானும் பிறநூ லானும்
ஐயம் அகலஐங் காண்டிகை உறுப்பொடு
மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி

சூத்திரத்தின் உள்பொருள் அல்லாமல்
அவ்விடத்துக்கு இன்றியமையாத எல்லாப்
பொருளும் விளங்கும்படி தன்னுரையாலும்
பிற நூலுரையாலும் தெளிவு பெறும்படி
காண்டிகையின் ஐவகை உரைகளுடன்
மெய்பொருளினைக் குறைவுபடாமற் 
கூறுவது விருத்தியுரை



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் உரை

Tamil Grammar Commentary





No comments:

Post a Comment