Friday, December 27, 2019

8) தாய்மொழியின் தனிச்சிறப்புகள்


அகமென
புறமென
வாழ்ந்திடும் மொழி

அழகாய்
மழலைகள்
பேசிடும் மொழி

அறிதலும்
புரிதலும்
இலங்கிடும் மொழி

அறிவால்
அனைத்தையும்
ஆய்ந்திடும் மொழி

அறிவின்
ஆழத்தை
அளந்திடும் மொழி

அன்னையின்
கருவறையில்
அறிந்திடும் மொழி

அனுதினமும்
செவிகள்
கேட்டிடும் மொழி

ஆண்டவனை
அர்த்தத்தோடு
அர்ச்சித்திடும் மொழி

ஆன்மீக
உணர்வினை
ஊட்டிடும் மொழி

ஆன்றோரும்
சான்றோரும்
போற்றிடும் மொழி

இயலிசை
நாடகமாய்
விளங்கிடும் மொழி

இலக்கணத்தை
இயல்பாய்
பழக்கிடும் மொழி

இலக்கியத்தால்
பண்பாட்டை
உணர்த்திடும் மொழி

இளமையாய்
என்றும்
திகழ்ந்திடும் மொழி

இன்பங்கள்
பலவற்றைத்
தந்திடும் மொழி

இனத்தை
அழியாமல்
காத்திடும் மொழி

உடலாய்
உயிராய்
உணர்ந்திடும் மொழி

உலகுக்கு
உன்னைக்
காட்டிடும் மொழி

உள்ளத்தில்
உணர்வினை
ஊட்டிடும் மொழி

உறவுகள்
உள்ளன்போடு
உறவாடிடும் மொழி

எதனையும்
சீர்தூக்கி
பார்த்திடும் மொழி

கணப்பொழுதில்
கவிதைகளை
இயற்றிடும் மொழி

கலைகளால்
கலாச்சாரத்தை
விளம்பிடும் மொழி

கற்காமல்
கதைபல
சொல்லிடும் மொழி

சிறகின்றி
சிந்தனையாய்
பறந்திடும் மொழி

தரணிக்குத்
தலைவனாய்
ஆக்கிடும் மொழி

தலைமுறை
தலைமுறையாய்
தொடர்ந்திடும் மொழி

தாயின்
தாலாட்டில்
தவழ்ந்திடும் மொழி

நவரசத்தை
நளினமாய்
விளக்கிடும் மொழி

நாள்தோறும்
வளர்ச்சிபல
கண்டிடும் மொழி

படிக்காத
மேதைகளை
உருவாக்கிடும் மொழி

படிக்காமல்
பாமரரும்
பேசிடும் மொழி

பகுத்தறிவைப்
புத்தியில்
புகுத்திடும் மொழி

பல்சுவை
படைப்புகள்
படைத்திடும் மொழி

பன்மொழிகள்
பயின்றிட
துணையாகிடும் மொழி

பாசத்தை
நேசத்தைப்
புகட்டிடும் மொழி

பாரினில்
மேன்மையை
தந்திடும் மொழி

மனிதனை
மகாத்மாவாய்
மாற்றிடும் மொழி

மானமே
உயிரென
சொல்லிடும் மொழி

வாழ்க்கையில்
வழிதுணையாய்
வந்திடும் மொழி

அது

தாய்தந்தை வழி
அவரது குழந்தை
கற்றுக் கொள்ளும்
தாய்மொழி

இத்தனை
சிறப்புகள்
மட்டுமல்ல

இன்னும்

எத்தனையோ
சிறப்புகள்
வாய்ந்த

தாய்மொழியைப்

போற்றிடும்
வகையில்

உலகம்
முழுதும்

வருடம்
தோறும்
பிப்ரவரி 21-ல்
கொண்டாடப்பட்டு
வருகிறது

உலக
தாய்மொழி
தினம்

World
Mother Language
Day

உலகில் வாழும்
ஒவ்வொருவரும்

அவரவர்
தாய்மொழியை

அந்த
இனிய நாளில்
மட்டுமல்ல
ஒவ்வொரு நாளும்

வணங்கியும்
போற்றியும்

வாயளவில்
அல்ல
மனதளவில்

ஏற்க வேண்டும்
ஓர்
உறுதிமொழி

தாய்மொழியைக்
காப்போம்
பிறமொழியையும்
கற்போம்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் தாய்மொழியின் தனிச்சிறப்புகள்

Tamil Grammar The Specialities of the Mother Tongue




No comments:

Post a Comment