Friday, December 27, 2019

20) நூலின் வகை


ஓர்இரு பாயிரம் அமைந்து
மூவகை நூல்களில் ஒன்றாக
நான்கு பொருள் பயனோடு
ஏழு வகை கொள்கைகளைத் தழுவி
பத்துக் குற்றங்கள் இல்லாமல்
பத்து அழகோடு
முப்பத்திரண்டு உத்தியைக் கொண்டு
இயல் அதிகாரம் என்னும் உறுப்புகளில் 
சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகிய 
வேறுபட்ட நடைகளைப் பெறும்

என்பது
நூலின் இயல்புகள்


இவற்றுள்
(நூலின் இயல்புகளில்)
ஒன்றான

மூவகை
நூல்களில்
ஒன்றாய்
அமைவது

என்பது
குறித்து

நூலின் வகை
என்ற
தலைப்பின் கீழ்

சற்று
விளக்கமாக
அறிவோம்


மூவகை நூல்கள்

முதல் நூல்
வழி நூல்
புடை நூல்


வினையினின்று
விலகி
தேர்ந்த
ஞானத்தை உடைய
ஆய்வாளன்
அறிந்து செய்வது

முதல் நூல்


முதல் நூலை
முழுவதும் ஒத்து
தேவையான
வேறுபாட்டுடன்
மரபு
கெடாது செய்வது

வழி நூல்


முதல் நூலுக்கும்
வழி நூலுக்கும்
சிறுபான்மை
ஒத்து
பெரும்பான்மை
வேறுபாட்டுடன்
செய்வது

புடை நூல்
(சார்பு நூல்)


மேலும்


முன்னோர்
கூறிய
சொற்பொருள்
மட்டுமல்லாது

அவர்
சொல்லையும்

பொன்போல்
போற்றுவோம்
என்பதற்கும்

முன்னோரின்
நூலுக்கு
வேறு நூல்
செய்தும்

மேற்கோள்
இல்லை எனும்
குறை
நீங்குதற்கும்

பழைய
சூத்திரத்தினை
மேற்கோளாக
கூறவேண்டும்

என்பது

வழி நூல்
புடை நூல்
செய்யும்போது
கவனத்தில்
கொள்ளவேண்டிய
ஒரு
சிறப்பு விதி



நன்னூல்
சூத்திரம்-5


முதல்வழி புடையென நூன்மூன் றாகும்

முதல்வழி புடைஎன நூல்மூன்று ஆகும்

முதல் நூல், வழி நூல், புடை(சார்பு) நூல் 
என நூல் மூன்று வகைபடும்.


நன்னூல்
சூத்திரம்-6


அவற்றுள்
வினையி னீங்கி விளங்கிய வறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்

அவற்றுள்
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்

அவற்றுள்;
வினையினின்று விலகி தேர்ந்த அறிவினால் 
ஆய்வாளன் அறிந்து செய்தது முதல்நூல் ஆகும்


நன்னூல்
சூத்திரம்-7


முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி
அழியா மரபினது வழிநூ லாகும்

முன்னோர் நூலின் முடிபுஒருங்கு ஒத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழிநூல் ஆகும்

முன்னோர் நூலின் முடிபில்முழுதும் ஒத்துப்
பின்னோன் தேவையான வேறுபாடுகளை  
மட்டும் கூறி அழியா மரபினை உடையது 
வழி நூல் ஆகும்


நன்னூல்
சூத்திரம்-8


இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித்
திரிபுவே றுடையது புடைநூ லாகும்

இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபுவேறு உடையது புடைநூல் ஆகும்

முன்னோர் செய்த முதல் நூலுக்கும் 
பின்னோன் செய்த வழி நூலுக்கும்
ஒருபகுதி ஒத்து பெரும்பான்மை வேறுபாடு
உடையது புடைநூல் ஆகும்


நன்னூல்
சூத்திரம்-9


முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும்
பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும் முன்னோரின்
வேறுநூல் செய்துமெனு மேற்கோளி லென்பதற்கும்
கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்

முன்னோர் மொழிபொருளே அன்றி அவர்மொழியும்
பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கும் முன்னோரின்
வேறுநூல் செய்தும்எனும் மேற்கோள்இல் என்பதற்கும்
கூறுபழம் சூத்திரத்தின் கோள்

முன்னோரின் சொற்பொருள் மட்டுமல்லாது 
அவர் சொல்லையும் பொன்போல் 
போற்றுவோம் என்பதற்காகவும் முன்னோரின் 
நூலுக்கு வேறு நூல் செய்தும் மேற்கோள் இல்லை 
எனும் குறை நீங்குதற்கும் பழைய சூத்திரத்தினை 
மேற்கோளாக கூறுக



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் நூலின் வகை

Tamil Grammar Kinds Of Classical Works




No comments:

Post a Comment