Friday, December 27, 2019

15) நன்னூல் : நூல் அறிமுகம்


இயல் இசை
நாடகம் என

முத்தமிழ்
பிரிவுகளைக்
கொண்டு

நாவுக்கும்
செவிக்கும்
சிந்தைக்கும்

இனிமை
பயப்பதால்

தேன்தமிழ்
என்று
சிறப்பிக்கப்படுவது

தமிழ் மொழி


அதில்
(தமிழ் மொழியில்)

இயற்றமிழுக்கான
இலக்கண
வகைகள் ஐந்து


அவைகள்
முறையே

எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
பொருள் இலக்கணம்
யாப்பு இலக்கணம்
அணி இலக்கணம்


இங்கு

எழுத்து சொல் தொடர்
குறித்த
தெளிவினைக்
கொடுத்திடும்

எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
கற்றிட

சிறந்த
இலக்கண நூலாகக்
கருதப்பட்டு

பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும்

பாட நூலாய்க்
கற்கப்படுகின்ற

பவணந்தி முனிவர்
இயற்றிய
நன்னூல் குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


இது
(நன்னூல்)


சீயகங்கன் என்ற
சிற்றரசனின்
வேண்டுகோளின்படி

பவணந்தி முனிவர்
என்ற
சமண முனிவரால்

தொல்காப்பியத்தை
முதல் நூலாகக்
கொண்டு
எழுதப்பட்ட
ஒரு வழி நூல்


இதன்
(நன்னூலின்)
வேறு பெயர்கள்


சிற்றதிகாரம்

(இரண்டு
அதிகாரங்களைக்
கொண்டது)


பின்னூல்

(தொன்னூல் என்பது
தொல்காப்பியம்
பின்னூல் என்பது
நன்னூல்)


இதற்கு
(நன்னூலுக்கு)

உரை எழுதிய
உரையாசிரியர்கள்


மயிலைநாதர்
சங்கர நமச்சிவாயர்
சிவஞான முனிவர்
ஆண்டிப்புலவர்

கூழங்கைத் தம்பிரான்
இராமானுச கவிராயர்
விசாகப்பெருமாள் ஐயர்
ஆறுமுக நாவலர்

மற்றும் பலர்


இதன் பகுப்பு
(நன்னூல் பகுப்பு)


அதிகாரம் என்ற
பெரும் பிரிவும்
இயல் என்ற
சிறு பிரிவும்
கொண்ட பகுப்பு
நன்னூலில்


எழுத்து இலக்கணம்


எழுத்ததிகாரம்

என்ற
பெரும் பிரிவின்கீழ்

எழுத்தியல்
பதவியல்
உயிரீற்றுப் புணரியல்
மெய்யீற்றுப் புணரியல்
உருபு புணரியல்

என்ற
ஐந்து சிறு பிரிவுகள்
கொண்டு

202
சூத்திரங்கள்
மூலமும்


சொல் இலக்கணம்


சொல்லதிகாரம்

என்ற
பெரும் பிரிவின்கீழ்

பெயரியல்
வினையியல்
பொதுவியல்
இடையியல்
உரியியல்

என்ற
ஐந்து சிறு பிரிவுகள்
கொண்டு

205
சூத்திரங்கள்
மூலமும்
விளக்கப்படுகின்றன


இதுமட்டுமன்றி
ஒரு நூலுக்கு
இன்றியமையாதது
எனக்
கருதப்படுவது

பாயிரம்

அது
ஒரு நூலில்

சிறப்புப்பாயிரம்
பொதுப்பாயிரம்

என
இருவகைகளில்
அமையும்


சிறப்புப்பாயிரம்
என்பது

அது
இடம்பெறும்
நூலுக்குரிய
முக்கியமான
விவரங்கள் கொண்டு
அமைவது


பொதுப்பாயிரம்
என்பது

பொதுவாக
எல்லா
நூல்களுக்கும்
உரிய
பொதுவான
விவரங்கள் கூறி
அமைவது


அவ்வகையில்

இதில்
(நன்னூலில்)


பொதுப்பாயிரம்
என்ற
தலைப்பின்கீழ்

நூலின் வரலாறு
ஆசிரியனது வரலாறு
பாடஞ்சொல்லலின் வரலாறு
மாணாக்கனது வரலாறு
பாடம் கேட்டலின் வரலாறு

முதலியனவும்

அதனைத்
தொடர்ந்து

சிறப்புப்பாயிரத்தின்
இலக்கணம்
என்ற
தலைப்பின்கீழ்

ஒரு குறிப்பிட்ட
நூலுக்கு மட்டும்
சிறப்பாகப்
பொருந்தும்
விவரங்களை
உள்ளடக்கிய

சிறப்புப்பாயிரத்தின்
இலக்கணமும்


55
சூத்திரங்கள்
மூலம்
விளக்கப்படுகின்றன


இங்கு


சூத்திரம்
(நூற்பா செய்யுள் பாடல்)
என்பது
மிகப்பெரிய
கருத்தையும்
சில சொற்களில்
சுருக்கமாக
விளக்குவது


நன்னூல்

462
சூத்திரங்கள்
கொண்டு

எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
ஆகியவற்றோடு

பாயிரம் குறித்தும்

தெள்ளத்தெளிவாய்
விளக்கிடும்
ஓர்
அற்புதமான நூல்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் நன்னூல் : நூல் அறிமுகம்

Tamil Grammar Nannuul An Introduction





No comments:

Post a Comment