Friday, December 27, 2019

16) பாயிரத்தின் பெயர்கள்


எந்நூல்
உரைப்பினும்
அந்நூற்கு
பாயிரம்
உரைத்து
உரைக்க

என்பது
தொல்தமிழ் வழக்கு


ஆம்...


ஒரு நூலுக்கு
இன்றியமையாதது
எனக்
கருதப்படுவது

பாயிரம்

(ஒரு நூலுக்கு
முன்னுரை போல்
அமையும் பகுதி)


முகவுரை
பதிகம்
அணிந்துரை
நூன்முகம்

புறவுரை
தந்துரை
புனைந்துரை
பாயிரம்

என்பன

ஒருபொருட்கிளவி

(ஒரு பொருள்
தரும்
பல சொற்கள்)


இவை
காரணப்பெயர்கள்


நூலின்
முகத்து
சொல்லப்படுவதால்

முகவுரை


நூலுக்குரிய
பொது சிறப்பு
பொருள்களைத்
தொகுத்துச்
சொல்வதால்

பதிகம்


நூலின்
அருமைபெருமைகள்
அலங்கரித்து
சொல்லப்படுவதால்

அணிந்துரை


நூலுக்கு
முகம்போலச்
சிறந்திருப்பதால்

நூன்முகம்


நூலின்
புறத்தே
சேர்க்கப்படுவதால்

புறவுரை


நூல் கருதிய
பொருள்
அல்லாதவைகளை
அதற்குத் தந்து
சொல்வதால்
தந்துரை


நூல் குறித்து
மிகைப்படுத்தி
கற்பனை கலந்து
சொல்லப்படுவதால்

புனைந்துரை


நூலில் கூறப்படும்
பரந்த பொருளைத்
தன்னிடத்தே
அடக்கி நிற்பதால்

பாயிரம்


மேலும்

உரைமுகம்
தோற்றுவாய்
முன்னுரை
பதிப்புரை
மதிப்புரை

என்பன

இக்காலத்துப்
பயன்பாடுகள்


முகமாய்
அமைந்த
உரையென்பதால்

உரைமுகம்


நூலின்
நுழைவாயிலாக
அமைவதால்

தோற்றுவாய்


நூல்
அறிமுகமாய்
முதலில்
சொல்லப்படுவதால்

முன்னுரை


பதிப்பாளர்
நூல்பதிப்பு
குறித்துச்
சொல்வதால்

பதிப்புரை


நூலின்
குறைநிறைகளை
மதிப்பிட்டு
விமர்சனமாய்
எழுதப்படுவதால்

மதிப்புரை


நன்னூல்
சூத்திரம்-1


முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம்,
புறவுரை, தந்துரை, புனைந்துரை என்பன 
பாயிரத்தின் பெயர்கள்.



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் பாயிரத்தின் பெயர்கள்

Tamil Grammar Names of Proem / Prolegomenon




No comments:

Post a Comment